இந்தியா

(கோப்பு படம்)

நாடு முழுவதும் 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

Published On 2022-07-26 19:53 GMT   |   Update On 2022-07-26 19:53 GMT
  • ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை.
  • மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், 532 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி கிரிஷன் பால் குர்ஜார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, மத்திய அரசு கடந்த 2015 ஆண்டு ஃபேம் (FAME)இந்தியா என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

தற்போது, இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ரூ.1000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் இந்தியா திட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 520 மின்னூட்டல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News