இந்தியா

இடஒதுக்கீடு விவகாரம்: எடியூரப்பா வீட்டின் முன்பு திடீர் போராட்டம்... கற்கள் வீசி தாக்குதல்

Published On 2023-03-27 17:27 IST   |   Update On 2023-03-27 17:27:00 IST
  • தங்கள் சமூகத்தினருக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக பஞ்சாரா சமூகத்தினர் கூறி உள்ளனர்.
  • கர்நாடக மக்கள்தொகையில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சேர்ந்து 24 சதவீதம் உள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் பட்டியலின சமூகத்திற்கான இடஒதுக்கீடு தொடர்பாக, பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு சமீபத்தில் புதிய முடிவை எடுத்தது. கல்வி மற்றும் வேலைகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மாற்றியமைத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து பஞ்சாரா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடஒதுக்கீட்டு சதவீதத்தை பிரித்ததால் தங்கள் சமூகத்தினருக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக பஞ்சாரா சமூகத்தினர் கூறி உள்ளனர்.

இன்று ஷிமோகா மாவட்டத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். பேரிகார்டுகளை தள்ளிவிட்டு முன்னேற முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், மத்திய அரசின் பரிந்துரையை மாநில அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் பஞ்சாரா சமூகத் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பஞ்சாரா சமூகம் மாநிலத்தில் ஒரு பட்டியலின சமூகத்தின் துணை சாதியாகும். கர்நாடக மக்கள்தொகையில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சேர்ந்து 24 சதவீதம் உள்ளனர்.

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் 2பி பிரிவில் இருந்து முஸ்லிம்களை நீக்கவும் மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, முஸ்லிம் தலைவர்களும் பாஜக அரசை விமர்சித்துள்ளனர்.

வொக்கலிகர்கள் மற்றும் வீரசைவ-லிங்காயத்துகளுக்கு அந்த 4 சதவீதத்தை பிரித்து கொடுக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News