VIDEO: லாரி மோதி உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் கட்டி கொண்டு சென்ற கணவர்
- மோர்படா அருகே வேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியுள்ளது.
- பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாரி மோதிய விபத்தில் மனைவி இறந்த நிலையில் யாரும் உதவி செய்யாததால் தன் மனைவியின் உடலை பைக்கில் கட்டி எடுத்து சென்ற கணவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது. ரக்ஷா பந்தன் அன்றைக்கு அமித், கியார்சி தம்பதியினர் நாக்பூரின் லோனாராவிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் கரண்பூருக்கு சென்றுகொண்டிருந்த போது, மோர்படா அருகே வேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கியார்சி சாலையில் விழுந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய அந்த லாரி டிரைவர் நிற்காமல், அந்த பெண்ணின் மீது மீண்டும் மோதிவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அந்த பெண்ணின் கணவர் அமித் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டும், யாரும் உதவி செய்ய முன்வராததால் வேறு வழியில்லாமல் இறந்து போன தனது மனைவியின் உடலை தனது இரு சக்கர வாகனத்தில் கட்டிக்கொண்டு தனது கிராமத்திற்கு கொண்டுசெல்ல புறப்பட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் பின்தொடர்ந்து வந்த காவல்துறையினர், வீடியோ எடுத்ததுடன் அமித்தை தடுத்து நிறுத்தி விசாரித்து உள்ளனர். விசாரணயில் அமித் நடந்ததைச் சொல்ல பின்னர் அவரது மனைவியின் உடலை நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.