மனைவியின் தொல்லை தாங்க முடியாததால் கணவர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது
- கடந்த ஞாயிற்றுக்கிழமை பீட்டர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
- வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கைப்பற்றப்பட்ட பிற ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவருடயை மனைவி பிங்கி. இவர்களுக்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் திருமணத்தின்போது இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இது தொடர்பான விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விவாகரத்து வழக்கில் பிங்கி ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டார்.
மேலும் தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு பீட்டர் அலுவலக வேலையை இழந்தார். முதலாளி அவரை வேலையிலிருந்து நீக்கியதால் மிகுந்த மன வேதனையில் இருந்தார். தொடர்ந்து பிங்கி மனதளவில் டார்ச்சர் கொடுத்து வந்தார். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பீட்டர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
பீட்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஒரு உருக்கமான கடிதம் எழுதி விட்டு உயிரை மாய்த்திருக்கிறார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
அந்த கடிதத்தில், "அப்பா மன்னிக்கவும்" என் மனைவி பிங்கி என்னைக் கொல்ல பார்க்கிறார். தினமும் சித்திரவதை செய்கிறார். மனைவி என் மரணத்தை விரும்புகிறாள். என் மனைவியின் சித்திரவதையால் நான் இறந்து கொண்டிருக்கிறேன் என்று எழுதியிருந்தார்.
பீட்டரின் சகோதரர் ஜோயல் இது குறித்து கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு குடும்பத்தினர் தேவாலயத்திலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீட்டர் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அவர் தனது மரண குறிப்பை எழுதியிருந்தார். அதில் அவரது மனைவி பிங்கி, தனது கணவர் இறக்க விரும்பியதாகவும், 'அப்பா மன்னிக்கவும்' மற்றும் 'அண்ணா தயவுசெய்து பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்' என்றும் எழுதியிருந்தார் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இது குறித்து புகாரின் பேரில் அசோக் நகர் போலீசார் பிங்கியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கைப்பற்றப்பட்ட பிற ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி டார்ச்சர் செய்ததால் காதல் திருமணம் செய்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.