AI மூலம் உருவாக்கப்பட்ட தங்கைகளின் ஆபாச படங்களை அனுப்பி மிரட்டிய நபர் - 19 வயது இளைஞர் தற்கொலை
- ஆபாச காட்சிகளை ராகுலுக்கு அனுப்பி சாஹில் என்ற நபர் ரூ.20,000 பணம் கேட்டுள்ளார்.
- வாட்சப்பில் இது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.
அரியானாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது 3 தங்கைகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 19 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ராகுல் பாரதியின் தொலைபேசியை ஹேக் செய்து, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஆபாச காட்சிகளை ராகுலுக்கு அனுப்பி சாஹில் என்ற நபர் ரூ.20,000 பணம் கேட்டது விசாரணையில் தெரியவந்தது.
வாட்சப்பில் இது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். இந்த உரையாடலில், பணம் கொடுக்கவில்லை என்றால் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வைரலாக்கிவிடுவேன் என்று சாஹில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராகுல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் குடும்பத்தினரின் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.