இந்தியா

பிரதமர் மோடிக்கு 4 கிலோ மாம்பழம் அனுப்பிய மம்தா

Published On 2023-06-07 04:17 GMT   |   Update On 2023-06-07 04:17 GMT
  • பெட்டியின் மேல் பிரதமர் மோடி, நம்பர் 7, லோக் கல்யாண்மார்க் என்ற முகவரி பொறிக்கப்பட்டு இருந்தது.
  • பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டு மம்தா பானர்ஜி 3 வகையான மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார்.

கொல்கத்தா:

அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் பிரதமர் மோடியும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள்.

அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் வரும்போது எல்லாம் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசுவதும், அறிக்கை வெளியிடுவதும் உண்டு. என்றாலும் அவை அவர்களது நட்பை ஒருபோதும் சீர் குலைப்பது இல்லை.

நட்பை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் விளையும் அதிக ருசிக்கொண்ட மாம்பழ வகைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகும். கடந்த பல ஆண்டுகளாக மாம்பழம் அனுப்புவதை மம்தா பானர்ஜி மறக்காமல் செய்து வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று அவர் பிரதமர் மோடிக்கு மாம்பழம் பரிசு அனுப்பி வைத்தார். 4 கிலோ எடை கொண்ட பெட்டியில் அழகாக அலங்கரிக்கப்பட்டு அந்த மாம்பழங்கள் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த பெட்டியின் மேல் பிரதமர் மோடி, நம்பர் 7, லோக் கல்யாண்மார்க் என்ற முகவரி பொறிக்கப்பட்டு இருந்தது. அனுப்புபவர் முகவரியில் மம்தா பானர்ஜி , மேற்கு வங்காள முதல்-மந்திரி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டு மம்தா பானர்ஜி 3 வகையான மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். கிம்சாகர், பஸ்லி, லட்சுமண் பாக் ஆகிய 3 வகை மாம்பழங்கள் இந்த ஆண்டு பரிசு பெட்டியில் இடம் பெற்றுள்ளன.

பிரதமர் மோடிக்கு அனுப்பியது போல ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கும் மம்தா பானர்ஜி இந்த ஆண்டு மாம்பழ பெட்டிகளை பரிசாக அனுப்பி உள்ளார். ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றி கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி அடுத்த நாளே மாம்பழம் பரிசு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி போல வங்கதேச பிரதமர் ஷேக் ஹஜினாவும் ஆண்டு தோறும் இந்திய தலைவர்களுக்கு மாம்பழம் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கு 2,600 கிலோ மாம்பழங்கள் அனுப்பி இருந்தார்.

Tags:    

Similar News