இந்தியா

அரசியலமைப்பு சாசனத்தை காங்கிரஸ் பாதுகாத்ததால் தான் மோடியால் பிரதமராக முடிந்தது: மல்லிகார்ஜூன கார்கே

Published On 2022-11-12 08:43 IST   |   Update On 2022-11-12 08:43:00 IST
  • மோடி அரசு விமானநிலையங்கள், துறைமுகங்களை விற்பனை செய்து வருகிறது.
  • நாட்டின் சொத்துக்கள் ஒரு சிலரின் கைகளில் சென்றடைகிறது.

மும்பை :

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மராட்டியத்தில் நடைபயணம் செய்கிறார். இதையொட்டி நாந்தெட்டில் நேற்று முன்தினம் இரவு ராகுல் காந்தியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-

காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்தது என்று பா.ஜனதா தலைவர்கள் அடிக்கடி கேட்கின்றனர். காங்கிரசால் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாங்கள் அரசியலமைப்பு சாசனத்தை பாதுகாத்தோம். அதனால் தான் இன்று நீங்கள் (மோடி) பிரதமராக முடிந்தது.

ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என பா.ஜனதா உறுதி அளித்தது. ஆனால் தற்போது அவர்கள் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளை மட்டும் கொடுத்து உள்ளனர். 18 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே போனது?.

மோடி அரசு விமானநிலையங்கள், துறைமுகங்களை விற்பனை செய்து வருகிறது. நாட்டின் சொத்துக்கள் ஒரு சிலரின் கைகளில் சென்றடைகிறது. காங்கிரஸ் உணவு பாதுகாப்பை கொடுத்தது. கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜனதா கொண்டு வந்த 10 திட்டங்களின் பெயரை அவர்களால் கூறமுடியுமா?.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே பேசுகையில், " பா.ஜனதா ஒரு நிகழ்வு. ஆனால் காங்கிரஸ் ஒரு பேரியக்கம். பிரதமர் அவர் தாயை சந்திக்கும் போது கூட கேமராவை தான் பார்க்கிறார். ஏனெனில் அது ஒரு நிகழ்ச்சி. பா.ஜனதா நாட்டுக்கு பசி, பயம், ஊழலை தான் கொடுத்து உள்ளது" என்றார்.

இதேபோல கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பாலாசாகேப் தோரட், அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்டவர்களும் பேசினர்.

Tags:    

Similar News