ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டுவது அமலாக்கத்துறையின் வாடிக்கை ஆகிவிட்டது - உச்சநீதிமன்றம் காட்டம்
- முந்தைய காங்கிரஸ் அரசின் கீழ் சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள மதுபான ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு எழுந்தது.
- விசாரணை செயல்முறையே தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது
சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் அரசின் கீழ் சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள மதுபான ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத் துறை பல மாநில அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களைக் கைது செய்துள்ளது. சமீபத்தில், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யாவின் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிகாரி ஒருவரின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டுவதை அமலாக்கத் துறை, தற்போது வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்படும் ஏராளமான வழக்குகளில் இதை நாங்கள் பார்க்கிறோம் என்று காட்டமாக தெரிவித்தனர்.
இதே வழக்கின் முந்தைய விசாரணையில் நீதிபதிகள் பேசுகையில், "விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டுத் தண்டிக்கப்படுகிறார். விசாரணை செயல்முறையே தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.