மகாராஷ்டிரா: பள்ளி மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட 7ம் வகுப்பு மாணவி!
- உயிர் மாய்ப்பு கடிதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தகவல்
- பள்ளி ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு.
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள ஜல்னா மாவட்டத்தில் 7ம் வகுப்பு சிறுமி, பள்ளி மாடியிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது மாணவி நேற்று (நவ.21) வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். சிறுமி வீட்டிலிருந்து சென்ற சிறிது நேரத்திலேயே அவளது தந்தைக்கு பள்ளியிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், உங்கள் மகள் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். செய்தியறிந்து உடனடியாக பள்ளியை அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சம்பவம் அறிந்து பள்ளிக்கு சதார் காவல்நிலைய போலீசார், உயிரிழப்புக்கான காரணத்தை அறிய சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள், குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்துள்ளனர். தற்கொலை கடிதங்கள் போன்ற எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், உடற்கூராய்வுக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் தெரிவித்தனர்.
உயிரை மாய்த்துக்கொண்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவராத நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் பள்ளியை குற்றம் சாட்டியுள்ளனர். ஆசிரியர்களின் துன்புறுத்தலால்தான் இந்த முடிவை எடுத்திருப்பார் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம் குறித்து உள்ளூர்வாசிகளும், பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.