இந்தியா

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Published On 2022-08-04 08:29 GMT   |   Update On 2022-08-04 09:52 GMT
  • அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர்.
  • எதிர்க்கட்சியினர் சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.

பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிடட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியா நிறுவனத்தின் ஆபீசுக்கு அமலாக்கத்துறை யினர் தற்காலிகமாக சீல் வைத்தனர்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் இதை முன்வைத்து அவையில் பிரச்சினையை கிளப்பினார்கள். சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்து வதாக கூறி அமளியில் ஈடுபட்டனர். இதே போல் ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக அவை 11.30 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது.

பின்னர் அவை கூடியதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மேல்சபையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதே பிரச்சினையை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

விசாரணை அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.

இதற்கு பா.ஜனதா உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை அவை தலைவர் நிராகரித்தார்.

இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து அமளியில் ஈடு பட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் முழுக்கம் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News