இந்தியா

ஐக்கிய அரபு எமிரேட்சில் கணவரின் சித்ரவதையால் தூக்கில் தொங்கிய கேரள இளம்பெண்

Published On 2025-07-20 13:29 IST   |   Update On 2025-07-20 13:29:00 IST
  • மது பழக்கத்திற்கு அடிமையான சதீஷ், அடிக்கடி மனைவி அதுல்யாவுடன் தகராறு செய்துள்ளார்.
  • சதீஷ், சந்தேகத்தின் பேரில் அதுல்யாவுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரளாவை சேர்ந்த பலரும் ஐக்கிய அரபு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் கொல்லத்தை சேர்ந்த விபஞ்சிகா என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷார்ஜாவில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு கேரள இளம்பெண் ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

குடும்ப வன்முறை காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக அவரது கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் கொல்லம் கோழிவிலா பகுதியை சேர்ந்தவர் அதுல்யா (வயது 30). இவருக்கும் சதீஷ் என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. துபாயில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக சதீஷ் பணியாற்றியதால், மனைவியுடன் ஷார்ஜாவில் வசித்து வந்தார்.

மது பழக்கத்திற்கு அடிமையான சதீஷ், அடிக்கடி மனைவி அதுல்யாவுடன் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் தான் அதுல்யா, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். முன்னதாக அவர், தனது கணவரின் உடல் ரீதியான தாக்குதல்கள் குறித்து தனது சகோதரிக்கு போட்டோ மற்றும் வீடியோ அனுப்பி உள்ளார்.

இதனை வைத்து அதுல்யாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில் திருமணமான 6 மாதத்தில் இருந்தே அதுல்யா பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வந்ததாக தெரிவித்துள்ளனர். சதீஷ், சந்தேகத்தின் பேரில் அதுல்யாவுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கொடுத்துள்ள வீடியோ ஆதாரத்தில் சதீஷ், நாற்காலியை தூக்கி அடிப்பது போன்ற காட்சி உள்ளிட்ட பல்வேறு நிலைகள் உள்ளன. அதன் அடிப்படையில் கொல்லம் சவர தேக்கும்பாகம் போலீசார், சதீஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சதீஷ்-அதுல்யா தம்பதியரின் மகள் ஆராதிகா (10) தற்போது கொல்லத்தில் உள்ள தனது தாத்தா-பாட்டியுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News