இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தில் ஆளும் பாஜக நிர்வாகிகள் ஆம் ஆத்மியை ரகசியமாக ஆதரிக்கின்றனர்- அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2022-10-10 02:59 IST   |   Update On 2022-10-10 02:59:00 IST
  • கெஜ்ரிவால் இந்து மத எதிர்ப்பாளர் என குஜராத்தில் பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
  • பொது கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால் தாம் அனுமன் பக்தன் என்று விளக்கம் அளித்தார்.

தரம்பூர்:

குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த மாநில தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் கெஜ்ரிவால் இந்து மத எதிர்ப்பாளர் என குஜராத்தின் பல நகரங்களில் பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

தரம்பூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் இது குறித்து பேசுகையில், தாம் அனுமன் பக்தன் என்றும், ஜென்மாஷ்டமி நாளில் பிறந்ததால், வீட்டில் கிருஷ்ணா என்பது தனது செல்லப்பெயர் என்றும் விளக்கம் அளித்தார். மேலும் அவர் பேசுகையில், குஜராத்தில் ஆளும் பாஜகவை சேர்ந்த பல நிர்வாகிகளும், தொண்டர்களும் தன்னை சந்தித்து ஆம் ஆத்மி கட்சிக்கு ரகசியமாக ஆதரவளிப்பதாக தெரிவித்ததாகவும், பாஜக தோல்வியை சந்திக்க அவர்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

பாஜகவை தோற்கடிக்க விரும்பும் அனைத்து பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ஆம் ஆத்மிக்கு ரகசியமாக உழைக்குமாறு கூற விரும்புவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார். குஜராத் காங்கிரஸ் தொண்டர்கள் பயப்படத் தேவையில்லை என்றும், அந்த கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். 

Tags:    

Similar News