4 நாட்கள் Freezer-இல் வைத்திருங்கள் - வீட்டில் திருமணம்.. முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தாயின் உடலை வாங்க மறுத்த மகன்
- மகன்கள் ஒரு வருடம் முன் வீட்டை விட்டு விரட்டியதால் ஜான்பூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
- இறுதிச் சடங்குகள் செய்யாமலேயே, உடலை அடக்கம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில், வீட்டில் திருமணம் நடப்பதால் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தாயின் உடலை 4 நாட்கள் ப்ரீசரில் வைத்திருக்க மகன் அறிவுறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரியான பூவல் குப்தா என்பவரின் மனைவி ஷோபா தேவி, நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
மகன்கள் ஒரு வருடம் முன் வீட்டை விட்டு விரட்டியதால் ஜான்பூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அவர் வசித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, முதியோர் இல்ல ஊழியர்கள் ஷோபா தேவியின் மகன்களுக்குத் தகவல் தெரிவித்தனர். முதலில் இளைய மகனிடம் பேசியபோது, அவர் தனது அண்ணனிடம் கலந்தாலோசித்த பிறகு பதிலளிப்பதாகக் கூறியுள்ளார்.
பின்னர் அவர் முதியோர் இல்லத்தை திரும்ப அழைத்து, "இப்போது வீட்டில் திருமணம் நடக்கிறது. இந்த நேரத்தில் உடலைக் கொண்டு வந்தால் துரதிர்ஷ்டவசமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு நான்கு நாட்கள் கழித்து வந்து உடலை எடுத்துக்கொள்கிறேன். அதுவரை உடலை டீப் ஃப்ரீசரில் வைத்திருங்கள்" என்று அண்ணன் சொல்ல சொன்னதாக கூறியுள்ளார்.
முதியோர் இல்லத்தின் ஊழியர்கள் நேரடியாக மூத்த மகனிடம் பேசியபோதும், அப்போதும் அதையே கூறியுள்ளார்.
இதையடுத்து, ஊழியர்கள் மற்ற உறவினர்களைத் தொடர்பு கொண்ட நிலையில் அவர்கள் ஷோபா தேவியின் மகன்களை சம்மதிக்க வைத்து உடலை பெற்று வந்தனர்.
ஆனால், மூத்த மகன் தாய்க்கு இறுதிச் சடங்குகள் செய்யாமலேயே, உடலை அடக்கம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்துள்ளனர்.