இந்தியா

இந்த ஆண்டில் 3வது முறை... மின் கட்டண உயர்வால் அதிர்ச்சியில் கர்நாடக மக்கள்

Published On 2022-09-24 14:59 GMT   |   Update On 2022-09-24 14:59 GMT
  • புதிய கட்டணம் மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • புதிய விதிமுறைகள் கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்ததாக அமைச்சர் தகவல்

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள் கொள்முதல் செலவு அதிகரித்துள்ளதால் அதை சரிசெய்வதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் யுனிட்டுக்கு சராசரியாக 35 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் 25 முதல் 30 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது வருகிற மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய கட்டணத்தின்படி, பெங்களூரு மின்சார வினியோக நிறுவன (பெஸ்காம்) எல்லையில் ஒரு யூனிட்டுக்கு 43 பைசா வசூலிக்கப்படும். மங்களூரு மின்சார வினியோக நிறுவன (மெஸ்காம்) எல்லை பகுதியில் 24 பைசாவும், உப்பள்ளி மின்சார வினியோக நிறுவன (ஹெஸ்காம்) எல்லை பகுதிகளில் 35 பைசாவும், கலபுரகி மின்சார வினியோக (ஜெஸ்காம்) எல்லை பகுதியில் 35 பைசாவும், சாமுண்டீஸ்வரி மின்சார வினியோக நிறுவன (செஸ்காம்) எல்லை பகுதியில் 34 பைசாவும் அதிகரித்துள்ளது.

மின் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளும், மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மின் கட்டணம் உயர்வு குறித்து மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது;-

கர்நாடகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு நிலக்கரியின் விலை உயர்வுக்கு ஏற்பவுவும், நிலக்கரி விலையை ஒப்பிட்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது என்ற புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அதாவது 3 மாதங்களுக்கு ஒருமுறை நிலக்கரி விலையை மதிப்பீடு செய்து, அதற்கு தகுந்தாற் போல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, தற்போது நிலக்கரி விலை உயர்வு காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய விதிமுறைகள் கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அமலுக்கு வந்தது. மாநிலத்தில் மின் கட்டணம் உயர்வதற்கு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறையே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News