இந்தியா

கர்நாடகா சட்டசபை தேர்தல்- 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

Published On 2023-04-13 02:53 IST   |   Update On 2023-04-13 03:00:00 IST
  • 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • 23 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலில் இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை தொடங்கிய நிலையில், ஆளும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்களில் பலருக்கு வாய்ப்பு கொடுக்காமல், புதுமுகங்களை களமிறக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்ததால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் பாஜக தேர்தல் குழு சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்தது. இந்நிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 52 பேர் புதுமுகங்கள், 8 பேர் பெண்கள். மேலும், 32 வேட்பாளர்கள் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பட்டியல் சமூகத்தையும், 16 பேர் பழங்குடியினர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை கர்நாடக பாஜக வெளியிட்டுள்ளது. இதைத்தவிர இன்னும் 12 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

இரண்டாவது பட்டியலில் ஹூப்பள்ளி தொகுதி இடம்பெறவில்லை. 23 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலில் இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

கர்நாடக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஏப்ரல் 13ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News