வீட்டில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
- பாராளுமன்றக் குழுவின் சட்டப்பூர்வமான தன்மையையும் எதிர்த்து யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
- மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 8-ந்தேதி ஒத்திவைத்தது.
டெல்லி ஜகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது வீட்டில் கட்டு கட்டாக பண குவியல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிபதி யஷ்வந்த் மறுத்தார். இச்சம்பவம் தொடர்பாக யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக்கோரி 146 எம்.பிக்கள் கையெழுத்திட்டு பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் வழங்கினர். இதையடுத்து 3 உறுப்பினர் கொண்ட விசாரணை குழுவை சபாநாயகர் அமைத்தார். இதே தீர்மானம் மேல்-சபையில் நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையே தன்னை நீக்குவதற்கான தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதையும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பாராளுமன்றக் குழுவின் சட்டப்பூர்வமான தன்மையையும் எதிர்த்து யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 8-ந்தேதி ஒத்திவைத்தது.
இந்த நிலையில், மக்களவை சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு மீது இன்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா, எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
இதில் யஷ்வந்த் வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மேல்-சபையின் துணைத் தலைவருக்கு ஒரு தீர்மானத்தை நிராகரிக்க அதிகாரம் இல்லை என்றும், 1968-ம் ஆண்டு நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் கீழ், சபாநாயகர் மற்றும் தலைவருக்கு மட்டுமே ஒரு நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தனர்.