இந்தியா

சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை: நீதிமன்றத்திலேயே ராஜினாமாவை அறிவித்த நீதிபதி

Published On 2023-08-05 06:48 GMT   |   Update On 2023-08-05 06:48 GMT
  • தனது ராஜினாமாவை இவ்வாறு ஒரு நீதிபதி அறிவிப்பது இது முதல் முறை
  • டிசம்பர் 2025ல் அவர் பணியிலிருந்து ஓய்வடைய இருந்தார்

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பெஞ்சை சேர்ந்த உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, ரோஹித் தியோ, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இத்தகவலை அவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களும், வழக்காடுபவர்களும் கூடியிருந்த போது, அனைவரும் அறியும்படி அறிவித்தார்.

ஒரு நீதிபதி இவ்வாறு தனது ராஜினாமாவை அறிவிப்பது இது முதல் முறை என தெரிகிறது.

நேற்று தனது ராஜினாமா குறித்து அறிவித்த நீதிபதி ரோஹித், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அவர் அப்போது அறிவித்ததாவது:

நீதிமன்றத்தில் உள்ள உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களை கடிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்; உங்களை காயப்படுத்த அல்ல. உங்கள் அனைவரையும் என் குடும்ப உறுப்பினர்கள் போல்தான் நான் கருதுகிறேன். என் சுயமரியாதைக்கு எதிராக என்னால் பணி செய்ய முடியாது. நான் என் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இதை உங்களிடம் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு நீதிபதி ரோஹித் தெரிவித்தார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு அனுப்பி உள்ளார்.

ஜூன் 2017ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ரோஹித் டிசம்பர் 2025ல் பணியிலிருந்து ஓய்வடைய இருந்தார்.

உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறை, நீதிபதி ரோஹித்தை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதற்கும் அவர் ராஜினாமாவிற்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிகிறது.

Tags:    

Similar News