இந்தியா

காங்கிரசில் சேருவதற்கு பதில் கிணற்றில் குதித்து விடுவேன்: நிதின் கட்காரி

Published On 2023-06-18 02:30 GMT   |   Update On 2023-06-18 02:30 GMT
  • நமது நாட்டின் ஜனநாயக வரலாறை நாம் மறக்க கூடாது.
  • நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது.

மும்பை :

மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று மராட்டிய மாநிலம் பண்டாராவில் நடந்த பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு கால அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். விழாவில் அவர், பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாந்த் சிச்கர் என்ற தலைவர் அவரை காங்கிரசில் சேருமாறு அறிவுரை கூறியதை நிராகரித்தது குறித்து நினைவு கூர்ந்தார்.

இது தொடர்பாக நிதின் கட்காரி பேசியதாவது:-

ஸ்ரீகாந்த் சிச்கர் ஒருமுறை என்னிடம் 'நீ நல்ல கட்சி தொண்டன், தலைவன். நீ காங்கிரசில் சேர்ந்தால் உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது' என்றார். நான் அவரிடம், நான் கிணற்றில் குதித்தாலும் குதிப்பேன், காங்கிரசில் சேரமாட்டேன் என்றேன். ஏனெனில் எனக்கு பா.ஜனதா மற்றும் அதன் சித்தாந்தத்தில் அதிக நம்பிக்கை இருந்தது. எனவே அதற்காக தொடந்து உழைப்பேன்.

காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் அந்த கட்சி பல முறை உடைந்து உள்ளது. நமது நாட்டின் ஜனநாயக வரலாறை நாம் மறக்க கூடாது. கடந்த காலம் மூலம் நாம் எதிர்காலத்துக்கு கற்றுக்கொள்ள வேண்டும். தனது 60 ஆண்டுகால ஆட்சியின் போதும் வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் முழங்கி வந்தது. ஆனால் அவர்கள் தங்கள் சொந்த லாபத்துக்காக கல்வி நிறுவனங்களை தான் திறந்தார்கள். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நாடு பொருளாதாரத்தில் சிறந்த நிலையை அடைந்து உள்ளது. நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்ததைவிட 2 மடங்கு அதிகமான நலத்திட்ட பணிகளை 9 ஆண்டில் பா.ஜனதா அரசு செய்து உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News