இந்தியா

பஹல்காம் தாக்குதல் : பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்த ஈரான் அதிபர்

Published On 2025-04-27 10:23 IST   |   Update On 2025-04-27 10:23:00 IST
  • காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
  • பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தார்.

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இத்தாக்குதலுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் மற்றும் ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தொலைபேசியில் பேசினார். அப்போது இது போன்ற மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல்களை திட்டவட்டமாக ஈரான் கண்டிக்கிறது என்று தெரிவித்த பெஷேஷ்கியன், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பிராந்திய ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும் இந்த துயர சம்பவங்கள் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பொறுப்பை அதிகரிக்கின்றன. பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு நீடித்த அமைதியை உறுதிசெய்து ஒற்றுமை மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் பயங்கரவாதத்தின் வேர்களை அழிக்க பிராந்திய அரசுகளை கட்டாயப்படுத்துகின்றன என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் பேசியது தொடர்பாக இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் கூறும்போது, ஈரான் அதிபர், புகழ்பெற்ற இந்தியத் தலைவர்களின் மதிப்புமிக்க மரபைக் குறிப்பிடும்போது அமைதி, நட்பு மற்றும் சகவாழ்வின் தூதர்களான மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற இந்திய தேசத்தையும் அதன் முக்கிய நபர்களையும் ஈரான் மிகவும் மதிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்தியாவின் அனைத்து நாடுகளுடனான உறவுகளிலும் இந்த உணர்வு நிலைத்திருக்கும் என்று ஈரான் அதிபர் நம்பிக்கை தெரிவித்தார் என்று தெரிவித்தது.

இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நம்பிக்கையையும் பெஷேஷ்கியன் தெரிவித்தார். ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி விவாதிக்க பிரதமர் மோடியை ஈரானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பகல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News