இந்தியா

உலக கோப்பையுடன் ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

Published On 2025-11-06 15:37 IST   |   Update On 2025-11-06 15:37:00 IST
  • வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடி பாராட்டுகளை தெரிவித்தார்.
  • ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் ராஜ்பவனில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.

உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் நேற்று மாலை பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர்.

அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடி பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர், பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டு வீராங்கனைகள் மகிழ்ந்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் ராஜ்பவனில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில்," 2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தனர்.

அணியை வாழ்த்திய ஜனாதிபதி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றைப் படைத்துள்ளதாகவும், இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக மாறிவிட்டதாகவும் கூறினார்.

இந்த அணி இந்தியாவைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார். அவர்கள் வெவ்வேறு பிராந்தியங்கள், வெவ்வேறு சமூகப் பின்னணிகள், வெவ்வேறு சூழ்நிலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், என்றாலும் அவர்கள் ஒரே அணி - இந்தியா" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News