பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் விடுதலை
- BSF வீரரின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
- "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று BSF வீரரின் மனைவி ரஜனி அழுதார்.
கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.
பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.
எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூர்ணம் சாஹு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். ஆபரேசன் சிந்தூர் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது மனம் உடைந்த ரஜனி, "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று அழுதார்.
இந்நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹுவை இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்துள்ளது. இந்தியா தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பூர்ணம் சாஹுவை பாகிஸ்தான் விடுத்துள்ளது.