உள்கட்டமைப்பை மேம்படுத்தியதால் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது- பிரதமர் மோடி
- நாடு முழுவதும் 160 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.
- உத்தரபிரதேசத்தில் உள்ள ஆன்மீக தலங்கள் மிக சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி இன்று வாரணாசியில் நடந்த விழாவில் 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உலகம் முழுவதும் வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு மிக பெரிய காரணமாக உள்கட்டமைப்பு அமைந்து உள்ளது. ஒவ்வொரு நாடும் சாதனை படைக்கும் வகையில் வளர்ந்து இருக்கிறது என்றால் அதன் பின்னணியில் உள்கட்டமைப்பு மேம்பாடுதான் இருக்கிறது.
உள்கட்டமைப்பு என்பது வெறும் பாலங்கள் கட்டுவதும், சாலைகள் அமைப்பதும் மட்டுமல்ல. ஒவ்வொரு பகுதியும் ஒருங்கிணைந்த வகையில் ஒட்டுமொத்த வளர்ச்சி பெறுவதுதான் உள்கட்டமைப்பின் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் நாங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம்.
அதனால்தான் இந்தியா சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் மிக வேகமான வளர்ச்சி பாதையில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கு துணைபுரியும் வகையில் நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களும், வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களும் அமைந்துள்ளன. இது இந்தியாவை வேகமாக வளர செய்கிறது.
தற்போது, இந்திய ரெயில்வேயில் வந்தே பாரத், நமோ பாரத், அம்ரித் பாரத் வகை ரெயில்கள் அடுத்த தலைமுறைக்கான ரெயில்களாக உருவெடுத்து உள்ளன. நாடு முழுவதும் 160 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 11 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் புதிய வளர்ச்சி பாதையை எட்டி இருக்கிறது.
மற்ற மாநிலங்களில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. அவர்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் உத்தரபிரதேச மாநில அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஆன்மீக தலங்கள் மிக சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வாரணாசிக்கு மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் வருவதை ஒரு புதிய எழுச்சியாக மாற்றி உள்ளனர். வாரணாசியில் ஒருநாள் தங்கியிருந்து இறைவழிபாடு செய்வது ஒவ்வொருவருக்கும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.
இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 4 வந்தே பாரத் ரெயில்களும் நாட்டின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும். இந்த ரெயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும். நேரத்தை கணிசமாக குறைக்கும். பனாரஸ்- கஜுர்கோ நகரங்களுக்கு இடையே விடப்பட்டுள்ள வந்தே பாரத் ரெயில் வாரணாசி, பிரயாக்ராஜ், சித்தரகூட் போன்ற ஆன்மீக கலாச்சார நகரங்களை இணைக்கிறது.
நாட்டின் வளர்ச்சியில் வந்தே பாரத் ரெயில்கள் புதிய மைல்கல்களாக இருக்கின்றன. தற்போது உத்தர பிரதேச மக்கள் தேவ் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது நடக்கும் விழாவை வளர்ச்சிக்கான திருவிழாவாகவும் கொண்டாடலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.