இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாது: அகிலேஷ் யாதவ்
- உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி 65 தொகுதிகளில் போட்டியிடும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்
- இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாத வகையில் செயல்பட்டு வருகிறோம்
வருகின்ற 2024 மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணியில் இடம்பிடித்துள்ள கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து மூன்று கூட்டங்களை நடத்தி பா.ஜனதாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.
தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முக்கிய கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸ், முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது. இதை நிதிஷ் குமார் வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கிடையே மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் 80 இடங்களில் 65 இடங்களில் போட்டியிடுவோம் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டிருந்தார். கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன் அடிப்படையில் அதிக இடங்களில் போட்டியிட இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு சம்பவங்களும் இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் "சமாஜ்வாடி கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்ததில் இருந்து தற்போது வரை, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியால் முன்னதாகவும், இனிமேலும் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடையாது.
கட்சியில் உள்ள தலைவர்கள் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வருகிறது என்பதை தற்போது உங்கள் முன் சொல்லிக் கொள்கிறேன்'' என தெரிவித்தார்.
இதனால் உத்தர பிரதேச மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு போதுமான இடங்களை பகிர்ந்து அளித்து போட்டியிட வாய்ப்புள்ளது.