மழை வேண்டி குலதெய்வத்துக்கு ஆடு, கோழி பலியிட்டு மண்சோறு சாப்பிட்ட கிராம மக்கள்- 2 மணி நேரத்தில் கொட்டி தீர்த்த மழை
- கிராம மக்கள் வரிசையாக முட்டி போட்டபடி மண் சோறு சாப்பிட்டனர்.
- தங்களது பிரார்த்தனையை ஏற்று குலதெய்வம் மழையை கொட்டி தீர்த்ததாக கிராம மக்கள் பரவசம் அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மான்யம், சாலூர் பகுதியில் மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இன்றியும் விவசாயம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.
கூர்ம ராஜபேட்டையை சேர்ந்த கிராம மக்கள் மழை பெய்வதற்காக தங்களது குல வழக்கப்படி குலதெய்வத்திற்கு பூஜை, மண் சோறு சாப்பிட செய்ய முடிவு செய்தனர். மண் சோறு சாப்பிட்டால் மழை பெய்யும் என்பது அவர்களது நம்பிக்கை.
அதன்படி கூர்ம ராஜ பாளையத்தை சேர்ந்த மக்கள் கிராமத்தின் அருகே வடக்கு பகுதியில் உள்ள மலைக்கு சென்றனர்.
அங்கு தங்களது குலதெய்வமான ஜக்கம்மாவுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை செய்தனர்.
பின்னர் சாமிக்கு படைத்த பிரசாதத்தை மண்ணில் வரிசையாக வைத்தனர். கிராம மக்கள் வரிசையாக முட்டி போட்டபடி மண் சோறு சாப்பிட்டனர்.
இதை தொடர்ந்து திரும்பி பார்க்காமல் கிராமத்திற்கு வந்தனர். பூஜை செய்துவிட்டு கிராமத்திற்கு வந்த 2 மணி நேரத்தில் சாலூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
தங்களது பிரார்த்தனையை ஏற்று குலதெய்வம் மழையை கொட்டி தீர்த்ததாக கிராம மக்கள் பரவசம் அடைந்தனர்.