இந்தியா

ஆக்கிரமிப்பு அகற்றம்

நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிப்பு... பெங்களூரு ஐ.டி. நிறுவனங்களுக்கு வந்த சிக்கல்

Published On 2022-09-14 14:11 GMT   |   Update On 2022-09-14 14:11 GMT
  • மழையால் பாதிப்பு ஏற்பட ஏரிகள் மற்றும் கால்வாய் நிலங்கள் ஆக்கிரமிப்பே முக்கிய காரணம் என்பது தெரியவந்தது.
  • ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக மகாதேவபுரா, மாரத்தஹள்ளி, பெல்லந்தூர், கே.ஆர்.புரம், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக 130-க்கும் மேற்பட்ட லே-அவுட்டுகள், 20-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி நின்றது. மழையால் பாதிப்பு ஏற்பட ஏரிகள் மற்றும் கால்வாய் நிலங்கள் ஆக்கிரமிப்பே முக்கிய காரணம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஏரி, கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கட்டிடங்களை இடித்து அகற்ற அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். அதன்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

மேலும், பெங்களூருவில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள ஐ.டி. நிறுவனங்களின் கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, விப்ரோ, பிரஸ்டீஜ், எகோ ஸ்பேஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் பல்வேறு முக்கிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அடுத்த பருவமழை தொடங்குவதற்குள் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News