இந்தியா

"சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ் முகாமில் பலரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்" Insta-வில் பதிவிட்டு இளைஞர் தற்கொலை

Published On 2025-10-12 15:43 IST   |   Update On 2025-10-12 15:49:00 IST
  • ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் பரவலாக உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் பலர் இதை நம்பாமல் போகலாம்
  • நமது சமூகத்தில் ஆர்எஸ்எஸ் எவ்வளவு ஆபத்தானது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற கிளைகளிலிருந்து குழந்தைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் தற்கொலை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.

திருவனந்தபுரம் மத்திய ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் கடந்த வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் எலிகுளம் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட வஞ்சிமலையைச் சேர்ந்த ஐடி ஊழியர் அனந்து அஜி (26) என்று அடையாளம் காணப்பட்டார். அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டில் செய்யப்பட்டன.

இறப்பதற்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் எழுதிய பதிவு, மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில், "நான் தற்கொலை செய்து கொள்வது பெண்ணாலோ, காதல் விவகாரத்தாலோ, கடன் பிரச்சனையாலோ அல்லது அது போன்ற எதனாலோ அல்ல. எனது பதட்டம் மற்றும் மனச்சோர்வு காரணமாக நான் இதைச் செய்கிறேன்.

எனக்கு ஒரு நபர் மற்றும் ஒரு அமைப்பைத் தவிர வேறு யாரிடமும் கோபம் இல்லை. அந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம்), என் தந்தை (மிகவும் நல்ல மனிதர்) என்னை அதில் சேரச் செய்தார். ஆர்.எஸ்.எஸ்ஸின் பல உறுப்பினர்களால் நான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானேன்.

ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் பரவலாக உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் பலர் இதை நம்பாமல் போகலாம்" என்று அனந்து எழுதியுள்ளார்.  

அனந்துவின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் கோரியுள்ளன.

சிபிஐ(எம்) இளைஞர் பிரிவான டிஒய்எஃப்ஐ மாநில செயலாளர் வி.கே. சனோஜ் பேசுகையில், "அன்று அவர் வெளியிட்ட அறிக்கை ஆர்எஸ்எஸ்ஸின் மனிதாபிமானமற்ற முகத்தை அம்பலப்படுத்துகிறது.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நமது சமூகத்தில் ஆர்எஸ்எஸ் எவ்வளவு ஆபத்தானது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற கிளைகளிலிருந்து குழந்தைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்" என்று கூறினார்.

அனந்து ஏற்கனவே மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். அனந்துவின் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதன் பிறகு, அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார் என்று எலிகுளம் பஞ்சாயத்துத் தலைவர் ஜிம்மி ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை. இயற்கைக்கு மாறான மரணமாக மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.    

Tags:    

Similar News