இந்தியா

சிறப்பு ரெயில் திடீர் ரத்து: ரெயில் நிலையத்தை கற்களால் தாக்கிய பயணிகளால் பரபரப்பு

Published On 2023-11-15 02:30 GMT   |   Update On 2023-11-15 02:30 GMT
  • பஞ்சாபில் சிறப்பு ரெயில் நேற்று திடீரென ரத்துசெய்யப்பட்டது.
  • இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஒன்றுகூடி கோஷம் எழுப்பினர்.

சண்டிகர்:

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், பண்டிகை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்புவதற்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

இதேபோல், வடமாநிலங்களில் வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சாத் பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகைக்காகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, பஞ்சாப்பில் உள்ள சர்ஹிந்த் ரெயில் நிலையத்தில் இருந்து பீகாரின் சஹர்சா வரை செல்லும் சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட இருந்தது. இதில் பயணம் செய்வதற்காக சர்ஹிந்த் ரெயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த சிறப்பு ரெயில் திடீரென ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பயணிகள் பிளாட்பாரத்திலும் ரெயில் தண்டவாளத்திலும் ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பினர். அவர்களில் சிலர் கற்களை எடுத்து ரெயில் நிலையம் மீதும், சிலர் நிறுத்தியிருந்த பயணிகள் ரெயில்கள் மீதும் வீசினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News