மனித பற்களை பயங்கர ஆயுதமாக கருத முடியாது: நாத்தனார் கடித்ததாக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து
- அண்ணிக்கும் நாத்தனாருக்கும் இடையிலான சண்டையில் நாத்தனார் கடித்துள்ளார்.
- அண்ணி அளித்த புகார் அடிப்படையில் போலீசார் பயங்கர ஆயுதம் மூலம் காயம் ஏற்படுத்துதல் பிரிவில் வழக்குப்பதிவு.
மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் வகையில் மனித பற்கள் அபாயகரமான ஆயுதங்களாக கருத முடியாது என, பெண் ஒருவர் தனது நாத்தனார் கடித்ததில் காயம் ஏற்பட்டதாக கூறிய புகாரில், எஃப்.ஐ.ஆர்.-யை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மும்பையில் சொத்து விசயமாக ஒரு பெண்ணிற்கும் அவரது நாத்தனாருக்கும் (கணவரின் தங்கை) இடையில் தகராறு இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டபோது, நாத்தனார் தனது அண்ணியை கடித்துள்ளார்.
இதனால் அந்த பெண் (அண்ணி) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் காயம் விளைவிக்கக் கூடிய பயங்கர ஆயுதத்தால் தாக்குதல் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயங்கர ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தியதாக தன் மீது போடப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர்-யை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்சில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனித பற்களை பயங்கரமான ஆயுதங்களாக கருத முடியாது. இதனால் பயங்கர ஆயுதங்கள் மூலமாக காயம் ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-யை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ சான்றிதழில் பற்கள் தடம் பதிந்துள்ளது. அதனால் லேசான காயம்தான் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் விபா கண்கண்வாடி, சஞ்சய் தேஷ்முக் தெரிவித்துள்ளனர்.
இந்த தண்டனைச் சட்டம் பிரிவு 324-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்படாதபோது, குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணையை எதிர்கொள்ள வைப்பது சட்ட செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதாகும் எனத் தெரிவித்துள்ளது.