இந்தியா

இமாச்சல பிரதேச தேர்தலில் கிரிமினல் வேட்பாளர்கள் 94 பேர் போட்டி

Published On 2022-11-04 10:24 GMT   |   Update On 2022-11-04 10:24 GMT
  • இமாச்சல பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சி செய்து வருகிறது.
  • ஏற்கனவே இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது.

சிம்லா:

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது. 68 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இங்கு கடந்த மாதம் 17-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது, பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து கட்சியிலும் கிரிமினல் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பா.ஜ.க சார்பில் 68 வேட்பாளர்களில் 12 பேரும், ஆம் ஆத்மியில் 12 பேரும், காங்கிரசில் 36 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியில் 2 பேரும், கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் 7 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.

இதில் 12 பேர் கடுமையான குற்ற வழக்குகளில் சிக்கியவர்களாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரும், கொலை வழக்குகளில் ஈடுபட்ட 3 பேரும், கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 3 பேரும் உள்ளனர்.

மொத்தம் 412 வேட்பாளர்களில் 94 பேர் 23 சதவீதத்தினர் கிரிமினல் வேட்பாளர்களாக உள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 338 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் 61 வேட்பாளர்கள் 18 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருந்தனர்.

இமாச்சல பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சி செய்து வருகிறது.

ஏற்கனவே இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது.

ஆம் ஆத்மியும் தற்போது மற்ற கட்சிகளுக்கு இணையாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

Tags:    

Similar News