இந்தியா

மலையான திரையுலகினர் மீதான பாலியல் புகார்: 34 வழக்குகளின் விசாரணை நிறுத்தி வைப்பு

Published On 2025-06-26 10:08 IST   |   Update On 2025-06-26 10:08:00 IST
  • சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை அரசு நியமித்தது.
  • ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மொத்தம் 34 வழக்குகள் பதியப்பட்டன.

திருவனந்தபுரம்:

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகம் இருப்பதாக வந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டியை மாநில அரசு கடந்த 2017-ம் ஆண்டு அமைத்தது.

அந்த கமிட்டியினர் ஏராளமான நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று அறிக்கை தயாரித்தனர். ஹேமா கமிட்டி தனது விசாரணை அறிக்கையை 2019-ம் ஆண்டு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் ஒப்படைத்தது. ஆனால் அந்த அறிக்கை பல ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் பல தரப்பினரும் வலியுறுத்தி வந்ததன் பேரில் ஹேமா கமிட்டி அறிக்கையை கடந்த ஆண்டு கேரள அரசு வெளியிட்டது. அந்த அறிக்கையில் மலையாள நடிகைகள், சினிமா படப்பிடிப்பு தளங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி மிகவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை அரசு நியமித்தது. அந்த குழுவினர் நடிகைகளின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது வழக்கு பதிந்தனர்.

ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மொத்தம் 34 வழக்குகள் பதியப்பட்டன. ஒவ்வொரு வழக்கிற்கான குற்றப்பத்திரிகையை தயார் செய்யும் பணியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பாலியல் புகார் கொடுத்த நடிகைகளில் பலர், வழக்கை தொடர விரும்பவில்லை.

இதனால் மலையாள திரையுலகினர் மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தநிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பதியப்பட்ட 34 வழக்குகள் விசாரணையையும் சிறப்பு புலனாய்வு குழு நிறுத்தியுள்ளது.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக ஹேமா கமிடடியிடம் வாக்குமூலம் அளித்தவர்கள், விசாரணைக்கு ஒத்துழைக்காததன் காரணமாக விசாரணையை முடிக்க வேண்டியிருந்ததாக கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு தகவல் தெரிவித்திருக்கிறது.

மலையாள திரையுலகினர் மீதான பாலியல் வழக்குகளில் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் சிறப்பு புலனாய்வு குழு நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News