பலத்த காற்றுடன் கனமழை - கேரளாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன
- பலத்த காற்று மற்றும் மழை நீடித்தபடி இருப்பதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
- கனமழைக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமடைந்திருக்கும் நிலையில், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. நேற்று 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சூர், மலப்புரம், கசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்வது மட்டுமின்றி காற்றும் வேகமாக அடிப்பதால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் விழுந்து விட்டன. அவை சாலைகள் மற்றும் வாகனங்களின் மீது விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களில் மட்டும் காற்றுடன் பெய்த கனமழைக்கு ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்துவிட்டன. மாநிலத்தில் உள்ள 25 வட்டங்களில் 48 மணி நேரத்திற்குள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழுந்துள்ளன. மேலும் 48 மின்சார டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்திருக்கின்றன.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் தடையால் 18ஆயிரத்து 100 மின்மாற்றி பகுதிகளில் சுமார் 30 லட்சம் மின் நூகர்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8.6லட்சம் நூகர்வோர்களுக்கு இன்று காலை வரை மின்சாரம் வழங்கப்படவில்லை.
பலத்த காற்று மற்றும் மழை நீடித்தபடி இருப்பதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடும் சிரமத்ததுக்கு மத்தியில் முறிந்துவிழுந்த மின்கம்பங்கள் மற்றும் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர்களை மாற்றியமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்து விழுந்திருப்பதால் ரூ56.7கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கேரள மின்வாரியம் தெரிவித்துள்ளது. சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் மின் வினியோகம் விரைவில் சீராகும் என்றும் மின்வாரியம் கூறியி ருக்கிறது.
கனமழைக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமடைந்திருக்கும் நிலையில், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. மின்னல் தாக்கியது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, மின்சாரம் தாக்கியது உள்ளிட்ட காரணங்களால் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 பேர் பலியாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.