இந்தியா

பூஜா கெத்கர் செய்த பெரிய குற்றம் என்ன?: முன்ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

Published On 2025-05-21 15:14 IST   |   Update On 2025-05-21 15:14:00 IST
  • பயிற்சி பெற்று வரும்போது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாக புகார்.
  • புகாரை விசாரிக்கும்போது UPSC தேர்வுக்கான விண்ணப்பத்தில் முறைகேடு செய்தது கண்டுபிடிப்பு.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பூஜா கெத்கர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். ஆனார். புனேயில் பயிற்சி பெற்று வரும்போதே ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாக புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு முறைகேடாக ஓபிசி மற்றும் உடல் ஊனம் சான்றிதழ் பெற்றதாக அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் கூறப்பட்டன. விசாரணை முடிவில் யுபிஎஸ்சி (Union Public Service Commission) பூஜா கெத்கரின் ஐஏஎஸ்-ஐ ரத்து செய்தது. மேலும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதித்தது.

டெல்லி போலீசார் பூஜா கெத்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனால் தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கருதிய அவர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திரா சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் "பூஜா கெத்கர் விசாதணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேவேளையில் அவருக்கு முன்ஜாமின் வழங்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

அத்துடன் "பூஜா கெத்கர் செய்த பெரிய குற்றம் என்ன?. அவர் போதைப்பொருள் தலைவனோ அல்லது பயங்கிரவாதியோ அல்ல. அவர்கள் கொலை குற்றத்தில் ஈடுபடவில்லை. அவர் NDFS குற்றத்தில் ஈடுபடவில்லை. அவர் எல்லைவற்றையும் இழந்து விட்டார். எங்கேயும் அவர் வேலை பெற முடியாது.

வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருக்க வேண்டிய பொருத்தமான வழக்கு இது" எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News