இந்தியா

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் புதிது அல்ல: சிராக் பஸ்வான் சொல்கிறார்..!

Published On 2025-07-26 07:34 IST   |   Update On 2025-07-26 07:36:00 IST
  • சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் முன்னதாக 4 முறை நடைபெற்றுள்ளது.
  • நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது.

பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் பீகாரில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட இருக்கிறது. இந்த சிறப்பு தீவிர திருத்தம் குடியுரிமை சட்டத்தை தேர்தல் ஆணையம் மூலம் பாஜக மறைமுகமாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. மேலும், வாக்காளர்களை நீக்கி தேர்தலில் வெற்றிபெற பாஜக முயல்கிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கை ஏற்கப்படாததால், கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்றைய பாராளுமன்ற அலுவல் பணி முற்றிலுமாக முடங்கியது.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரான சிராக் பஸ்வான் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) புதிது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிராக் பஸ்வான் கூறுகையில் "சிறப்பு தீவிர திருத்தம் பணி நமது நாட்டில் முதன்முறையாக நடைபெறவில்லை. முன்னதாக 4 முறை நடைபெற்றுள்ளது. இந்த முறை அதே அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது. ஆனால் யாராவது நாட்டிற்குள் ஊடுருவியிருந்தால், அவர்கள் மிகப்பெரிய உரிமையான வாக்குரிமையை தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

Tags:    

Similar News