புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் - மத்திய அரசு உத்தரவு
- பிரதமர் முன்மொழியும் ஒருவரை ஜனாதிபதி நியமனம் செய்து வந்தார்.
- இந்த குழுவில் ஒரு மத்திய அமைச்சர், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இடம் பெறுவர்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (பிப்ரவரி 18-ம் தேதி) ஒய்வு பெறுகிறார். இதனால், புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை பொறுத்தவரை பிரதமர் முன்மொழியும் ஒருவரை ஜனாதிபதி நியமனம் செய்து வந்தார்.
தேர்தல் ஆணையர்கள் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி உயர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில், மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, பிரதமர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும். பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் ஒரு மத்திய அமைச்சர், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இடம் பெறுவர்.
இந்த சூழலில், ராஜீவ் குமார் பணி ஓய்வுக்கு பிறகு அடுத்த ஆணையர் யார் என்பதை முடிவு செய்ய இந்த குழு நேற்று கூடியது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் (EC) உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆவார்.
தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமாரின் பதவிக்காலம் ஜனவரி 26, 2029 வரை நீடிக்கும். 1989-ஆம் ஆண்டு ஹரியானா-கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான விவேக் ஜோஷி, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மே 21, 1966 அன்று பிறந்த விவேக் ஜோஷி (58), 2031 வரை தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவார். அரியானாவின் முன்னாள் தலைமைச் செயலாளரான ஜோஷி, ஜனவரி 2019 முதல் மத்திய பிரதிநிதியாக இருந்தார்.