இந்தியா

ஹர்ஷ் சங்வி, குஜராத் அமைச்சரவை கூட்டம்

குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக அரசு முடிவு- காங்கிரஸ் கண்டனம்

Published On 2022-10-29 21:26 GMT   |   Update On 2022-10-29 21:26 GMT
  • குழு அமைப்பது என மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.
  • உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரே மாதிரியான உரிமைகளை அளிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மதிப்பீடு செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அதேபோல் ஒரு குழுவை அமைக்கும் திட்டத்திற்கு குஜராத் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த குழுவுக்கு அம்மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை வகிப்பார் என்றும், இதில் 3 முதல் 4 உறுப்பினர்கள் வரை இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குஜராத் அரசின் இந்த அறிவிப்புக்கு அம்மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக அரசின் இந்த முடிவு சட்டசபை தேர்தலுக்கு முன்பான ஒரு ஏமாற்று வேலை என்று குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குறிப்பிட்டார். இதுபோன்ற சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில சட்டமன்றத்திற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News