இந்தியா

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 2வது முறையாக பதவி ஏற்றார்- பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

Published On 2022-12-12 08:43 GMT   |   Update On 2022-12-12 08:43 GMT
  • குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
  • பூபேந்திர படேலுக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக கடந்த 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சி 156 இடங்களை கைப்பற்றியது. கடந்த முறையை விட கூடுதலாக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. 60 தொகுதிகளை அந்த கட்சி இழந்தது. புதிதாக களம் இறங்கிய ஆம் ஆத்மி 5 தொகுதிகளை வென்றது. பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் குஜராத் முதல்வரின் பதவி ஏற்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. காந்தி நகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 2-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி கடந்த ஆண்டு செப்டம்பரில் மாற்றப்பட்டு அப்பதவி பூபேந்திர படேலுக்கு வழங்கப்பட்டது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் மற்ற மந்திரிகளும் பங்கேற்றார்கள்.

பா.ஜனதா ஆளும் முதல்-மந்திரிகளான யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்), மனோகர்லால் கட்டார் (அரியானா), சிவ்ராஜ்சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), பசவராஜ் பொம்மை (கர்நாடகா), புஷ்கர்சிங்தாமி (உத்தரகாண்ட்) மற்றும் கூட்டணியை சேர்ந்த மகாராஷ்டிர முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர் சந்தோஷ், குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா எம்.பி.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

Tags:    

Similar News