இந்தியா

தெரு நாய் கடித்து 4 மாதமாக சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழப்பு

Published On 2025-08-19 11:30 IST   |   Update On 2025-08-19 11:30:00 IST
  • மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு ரேபிஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
  • கடந்த 4 மாதமாக குழந்தைக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டம் சாஸ்திரி பரங்கேயை சேர்ந்த 4 வயது சிறுமி கதிராபானு. சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு தெருநாய் திடீரென ஆவேசம் அடைந்து சிறுமி கதிராபானுவை கடித்து குதறியது. இதில் சிறுமியின் முகம் மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் தெருநாயிடம் இருந்து சிறுமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிறுமியை பெங்களூருவில் உள்ள இந்திராகாந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு ரேபிஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடந்த 4 மாதமாக குழந்தைக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள் அளித்தும் குழந்தை கதிராபானு இறந்து விட்டது.

கர்நாடகாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 2.8 லட்சம் பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் 26 பேர் இறந்து இருப்பதாகவும் மாநில கண்காணிப்பு பிரிவின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News