இந்தியா

அனில் சவுகான்

முப்படைகளின் தலைமைத்தளபதி ஆனார் அனில் சவுகான்

Published On 2022-10-01 08:58 IST   |   Update On 2022-10-01 08:58:00 IST
  • ஜெனரல் அனில் சவுகான், பிபின் ராவத்தைப் போன்றே உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
  • இந்தியாவில் 3 நட்சத்திர அந்தஸ்துடன் ஓய்வு பெற்ற ஒருவர் 4 நட்சத்திர அந்தஸ்து பதவிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறை.

புதுடெல்லி:

இந்தியாவில் முதல் முறையாக 2020-ம் ஆண்டு சி.டி.எஸ். என்று அழைக்கப்படுகிற முப்படைகளின் தலைமைத்தளபதி பதவி உருவாக்கப்பட்டு, அதில் அமர்த்தப்பட்டவர், பிபின் ராவத். ஆனால் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி தமிழ்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.

அதன்பின்னர் 9 மாதங்கள் ஆன நிலையில் அந்தப் பதவியில் இப்போது அனில் சவுகான் (வயது 61) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் டெல்லியில் நேற்று முப்படைகளின் தலைமைத்தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அத்துடன் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளர் பொறுப்பையும் இவர் வகிப்பார்.

முன்னதாக அவர் இந்தியா கேட் வளாகத்தில், நாட்டுக்காக உயிர் நீத்த முப்படை வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.

முப்படைகளின் தலைமைத்தளபதி பொறுப்பை ஏற்ற பின்னர் ஜெனரல் அனில் சவுகான் கூறுகையில், " நான் இந்திய ஆயுதப்படைகளின் மிக உயரிய பதவியை ஏற்றுக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். முப்படைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்; அனைத்து சவால்களையும் சிரமங்களையும் ஒன்றாகச் சமாளிக்க முயற்சி செய்வேன்" என குறிப்பிட்டார்.

அவருக்கு ரைசினா ஹில்சில் சவுத் பிளாக் புல்வெளியில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி மற்றும் கடற்படை துணைத்தளபதி எஸ்.என். கோர்மேட் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

ஜெனரல் அனில் சவுகான் முப்படைகளின் தலைமைத்தளபதி பொறுப்பேற்றபோது அவரது துணைவியார் அனுபமா உடனிருந்தார்.

முப்படை தலைமைத்தளபதி பொறுப்பை ஏற்ற பின்னர் அனில் சவுகான், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தகவல்கள் கூறுகின்றன.

ஜெனரல் அனில் சவுகான், பிபின் ராவத்தைப் போன்றே உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள பவுரி கர்வால் மாவட்டம், குவானாவில் 1961-ம் ஆண்டு, மே 18-ந் தேதி பிறந்தவர் ஆவார்.

கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியிலும், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியிலும் படித்தவர்.

1981-ம் ஆண்டு, இந்திய ராணுவத்தின் 11 கூர்க்கா ரைபிள்ஸ் படையில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து, கிழக்கு பிராந்திய ராணுவ தளபதியாக பணியாற்றி, 40 ஆண்டு கால சேவைக்குப்பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் 31-ந் தேதி பணி நிறைவு செய்தவர் ஆவார். அதன்பின்னர் அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவல் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

இவர் சீன விவகாரங்களில் நிபுணராக பார்க்கப்படுகிறார். கிழக்கு லடாக்கில் இந்திய, சீன எல்லை பிரச்சினை நீடித்து வருகிற நிலையில், இவரது நியமனம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் 3 நட்சத்திர அந்தஸ்துடன் ஓய்வு பெற்ற ஒருவர் 4 நட்சத்திர அந்தஸ்து பதவிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News