இந்தியா

ஆந்திராவில் எண்ணெய் கிணற்றில் எரிவாயு கசிவு, பயங்கர தீவிபத்து - மக்கள் பீதி

Published On 2026-01-05 23:42 IST   |   Update On 2026-01-05 23:42:00 IST
  • அந்தப் பகுதி முழுவதையும் சூழ்ந்த கரும்புகையும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
  • அச்சமடைந்த கிராம மக்கள், தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் ஊரை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் எரிவாயு கசிவு மற்றும் தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோனசீமா மாவட்டம் ரசோல் அருகே உள்ள இருசுமண்டா கிராமத்தில் அமைந்துள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் இன்று வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக கச்சா எண்ணெய் கலந்த எரிவாயு மிகக் கடுமையான அழுத்தத்துடன் கசியத் தொடங்கியது. சில நிமிடங்களிலேயே இந்த வாயு கசிவு தீபற்றி எரியத் தொடங்கியது.

வானுயர எழும்பிய நெருப்புப் பிழம்புகளும், அந்தப் பகுதி முழுவதையும் சூழ்ந்த கரும்புகையும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஓஎன்ஜிசி மீட்புக் குழுவினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இருசுமண்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களில் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது.

மேலும், வீடுகளில் மின் சாதனங்களை இயக்கவோ அல்லது அடுப்புகளைப் பற்றவைக்கவோ வேண்டாம் என அதிகாரிகள்   பொதுமக்களுக்குக் எச்சரிக்கை விடுத்தனர்.

சம்பவத்தின்போது யாரும் அருகே இல்லை. அதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விவசாய நிலம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டது என தகவல் தெரிவிக்கின்றது. இந்த பகுதியில் இதற்கு முன்பும் இதேபோன்ற எரிவாயு கசிவு ஏற்பட்டு, தீ விபத்து சம்பவமும் ஏற்பட்டு உள்ளது. 

தற்போது நிலைமை மோசமடைந்ததைக் கண்டு அச்சமடைந்த கிராம மக்கள், தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் ஊரை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

எரிவாயு கசிவைக் கட்டுப்படுத்தும் வரை அந்தப் பகுதி முழுதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News