இந்தியா

டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ரவுடி- பெண் தாதா திருமணம்

Published On 2024-03-13 05:30 GMT   |   Update On 2024-03-13 06:03 GMT
  • 2 தாதாக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
  • ஆயுதம் ஏந்திய 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி:

அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் என்ற காலா ஜதேயிதி. பிரபல தாதாவான இவர் மீது 76-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவரது தலைக்கு அரியானா போலீசார் ரூ.7 லட்சம் பரிசு அறிவித்த நிலையில், 2021-ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்தவர் பெண் தாதாவான அனுராதா சவுத்ரி. இவரை அப்பகுதியில் மேடம் மின்ஸ் ரிவால்வர் ராணி என்றே அழைத்து வந்தனர். இவர் மீதும் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டு நிச்சயமும் நடந்தது. அதன்படி கோர்ட்டில் பரோல் கேட்டு விண்ணப்பித்தனர். திருமணத்திற்காக இருவருக்கும் பரோல் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து டெல்லி துவாரகா செக்டார் 3-ல் சந்தோஷ் கார்டன் என்ற மகாலில் தாதா தம்பதியான காலா ஜதேயிதி-அனுராதா சவுத்ரியின் திருமணம் நடைபெற்றது.


இதில் 2 தாதாக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தாதாக்களின் எதிரிகளால் அசம்பாவிதம் நடைபெறக்கூடும் என கருதப்பட்டதால் திருமணம் நடைபெற்ற மண்டபத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆயுதம் ஏந்திய 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தாதா தம்பதியினர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

Tags:    

Similar News