இந்தியா

நரசிம்ம ராவ் முதல் மன்மோகன் சிங் வரை.. செனாப் பாலம் திறப்பில் சுய பெருமை தேடும் மோடி - காங்கிரஸ்

Published On 2025-06-06 15:39 IST   |   Update On 2025-06-06 15:54:00 IST
  • இதன் பொருள் ஜூன் 26, 2013 அன்று, பாரமுல்லா மற்றும் காசிகுண்ட் இடையேயான 135 கி.மீ ரயில் இணைப்பு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
  • தொடர்ந்து சுய-பெருமை தேட முயற்சிப்பதால், இந்த உண்மையை தொடர்ந்து மறுக்கிறார்.

செனாப் நதி மீது உலகின் உயரமான உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை (USBRL) காங்கிரஸ் ஆட்சியின் தொடர்ச்சிக்கு ஒரு வலுவான எடுத்துக்காட்டு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி, தனது இடைவிடாத சுயபிம்ப ஆசையால், அதை தொடர்ந்து மறுத்து வருகிறார் என்று அவர் குற்றம்சாட்டினார்.

இமயமலையின் கரடுமுரடான நிலப்பரப்பு வழியாக செல்லும், ரூ.43,780 கோடி செலவில் கட்டப்பட்ட 272 கி.மீ நீள ரெயில் இணைப்பான USBRL-ஐ பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷின் அறிக்கையில், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மார்ச் 1995 இல் USBRL முன்மொழிவு முதன்முதலில் அனுமதிக்கப்பட்டது. இது மார்ச் 2002 இல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஒரு தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 13, 2005 அன்று, ஜம்மு மற்றும் உதம்பூர் இடையேயான 53 கி.மீ ரயில் இணைப்பை பிரதமர்  மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.

2008 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி, ஸ்ரீநகருக்கு வெளியே அனந்த்நாக் மற்றும் மஜோம் இடையேயான 66 கி.மீ ரயில் இணைப்பை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.

2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி, ஸ்ரீநகருக்கு வெளியே மஜோம் மற்றும் பாரமுல்லா இடையேயான 31 கி.மீ ரயில் இணைப்பையும் அவர் திறந்து வைத்தார்.

அக்டோபர் 29, 2009 அன்று,  மன்மோகன் சிங் அனந்த்நாக் மற்றும் காசிகுண்ட் இடையேயான 18 கி.மீ ரயில் இணைப்பையும், ஜூன் 26, 2013 அன்று காசிகுண்ட் மற்றும் பானிஹால் இடையேயான 11 கி.மீ ரயில் இணைப்பையும் திறந்து வைத்தார்.

இதன் பொருள் ஜூன் 26, 2013 அன்று, பாரமுல்லா மற்றும் காசிகுண்ட் இடையேயான 135 கி.மீ ரயில் இணைப்பு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் பிரதமர் மோடி, தொடர்ந்து சுய-பெருமை தேட முயற்சிப்பதால், இந்த உண்மையை தொடர்ந்து மறுக்கிறார். USBRL போன்ற மிகவும் சவாலான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் கட்டத்தில் இந்த உண்மை மிகவும் தெளிவாகத் தெரிகிறது என்று அவர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக் காட்டினார். 

Tags:    

Similar News