சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை
- இந்திராகாந்தி படுகொலைக்குப் பின் சீக்கியர்களுக்கு எதிராக நாடுமுழுவதும் வன்முறை வெடித்தது.
- டெல்லியில் மட்டும் 2,100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலைக்குப் பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடுமுழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2,800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2,100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது சரஸ்வதி விஹார் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரங்கள் பிறகு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.