இந்தியா

உப்பள்ளியில் கியாஸ் குழாயில் பயங்கர தீ

Published On 2025-02-11 04:54 IST   |   Update On 2025-02-11 04:54:00 IST
  • வீட்டு முன்பு கியாஸ் குழாயில் தீப்பிடித்து எரிந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
  • மக்கள் அனைவருமே தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.

உப்பள்ளி:

கர்நாடகத்தில் உப்பள்ளி, மங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு கியாஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உப்பள்ளி டவுனில் ராஜட்கிரி முதுல் கிராசில் உள்ள கியாஸ் குழாயில் திடீரென்று கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.

இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த கியாஸ் குழாய் வீட்டு முன்பாக செல்கிறது. இதனால் வீட்டு முன்பு கியாஸ் குழாயில் தீப்பிடித்து எரிந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அலறியடித்தப்படி சுற்றுச்சுவரை ஏறி குதித்து வெளியேறினர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அனைவருமே தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனே இதுபற்றி கியாஸ் வினியோக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கியாஸ் வினியோகத்தை நிறுத்தினர்.

இதற்கிடையே சம்பவம் பற்றி உப்பள்ளி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் ரசாயன நுரையை பயன்படுத்தி கியாஸ் குழாயில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீயை முழுமையாக தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

இந்த தீவிபத்தால் சில வீடுகளின் முன்பு நின்ற மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்ததால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன. பின்னர் கியாஸ் வினியோக அதிகாரிகள், ஊழியர்கள் வந்து கசிவு ஏற்பட்ட இடத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News