தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த ஆவண படக்குழுவினர்: 15 பேர் கைது
- டிரோன்கள், காமிராக்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று படப்பிடிப்பு.
- அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்திற்குள் துப்பாக்கிகள், டிரோன்கள், காமிராக்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று படப்பிடிப்பு நடத்திய ஆவண படக்குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய விவரம் வரு மாறு:-
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அரணாமலை அருகே உள்ள மாப்பிளா தாளமுடி வன மண்ட லத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் உரிய அனுமதி பெறாமல் அத்துமீறி சென்று படப்பிடிப்பு நடத்துவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் அதிகாரிகள் வினோத், ரிஜேஷ் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது தடை செய்யப பட்ட வனப்பகுதிக்குள் ஆவணப்பட குழுவினர் போலி துப்பாக்கிகள், புகை துப்பாக்கிகள், டிரோன்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தினர். இதையடுத்து படப்படிடிப்பு நடத்தியவர்களை வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவர்களிடமிருந்து படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காமிராக்கள், டிரோன்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், ஆவணப் படங்கள் எடுக்கும் குழுவினர் என்றும், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
ஆவணப்படம் எடுப்பதற்காக கேரளா வந்த அவர்கள், இங்குள்ளவர்கள் சிலரின் உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்று படப்பிடிப்பு நடத்தி இருக்கின்றனர். அவர்கள் சென்ற பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் படப்பிடிப்பை நிறுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிந்து ஆவண பட குழுவினரான ஐதராபாத்தை சேர்ந்த ஹரிநாத், சைதன்ய சாய், ரமேஷ்பாபு, ரேவந்த் குமார், கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஹரி, அபிராஜ், பவன் பி. நாயர், பிரவீன் ராய், மற்றொரு ஸ்ரீஹரி, சருண் கிருஷ்ணா, அதுல், முகமது அப்துல் மஜீத், சஞ்சல் பிரசாத் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஹரிநாத் என்பவர் தான் ஆவண படத்தின் இயக்குனராக செயல்பட்டுள்ளார். கைதானவர்களின் மீது தடை செய்யப்பட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படப்பிடிப்பு நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.