131 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட விவசாய தலைவர்.. போராட்டம் தொடரும் என உறுதி!
- அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது
- அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.
பஞ்சாப் விவசாய தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 131 நாட்களாக நடத்தி வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடித்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறிப்பாக பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வலியுறுத்தி அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இருப்பினும் மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவரின் போராட்டம் தொடர்ந்து வந்தது. 70 வயதான அவர் ஏற்கனவே உடல்நலப்பிரச்னைகளுடன் இருந்த நிலையில் உண்ணாவிரதத்தால் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவனமயில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று பஞ்சாபின் பதேகர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிசான் மகாபஞ்சாயத்தின் போது ஜக்ஜித் சிங் தல்லேவால் தனது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தார்.
கூட்டத்தில் பேசிய அவர், பஞ்சாப் மற்றும் முழு நாட்டையும் சேர்ந்த விவசாயிகள் ஆதரவாளர்களின் வேண்டுகோளின் பேரில், இன்று எனது சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர முழு மனதுடன் முடிவு செய்துள்ளேன். ஆனால் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார். போராட்டதின் வடிவம் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அது முடிந்துவிடவில்லை என்று அவர் கூறினார்.
மேலும் மத்திய மற்றும் மாநில அரசை விமர்சித்து பேசிய அவர், ஒருபுறம் அரசாங்கம் எங்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறது என்றும் மறுபுறம் எங்கள் போராட்டம் இரவில் வலுக்கட்டாயமாக கலைக்கப்படுகிறது. அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.
முன்னதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதவில், விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலை உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் முன்னரே திட்டமிடப்பட்ட தேதியின்படி மே 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாய அமைப்புகளுடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதாக உறுதியளித்தார். தல்லேவால் தற்போது மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.
கடைசியாக கடந்த மார்ச் 19 அன்று மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.