கார் மோதி விபத்து- கோமா நிலைக்கு சென்ற சிறுமியின் குடும்பத்துக்கு ரூ1.15 கோடி இழப்பீடு
- சிறுமி கோமா நிலையிலேயே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
- மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகராவில் உள்ள சோரோட் பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பேபி(வயது68) மற்றும் அவரது பேத்தியான 9 வயது சிறுமி த்ரிஷானா ஆகிய இருவரின் மீதும் அந்த வழியாக அதிவேகமாக சென்ற கார் மோதியது.
இதில் மூதாட்டி பேபி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் மீது மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது. அந்த கார் 10 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பான வழக்கில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எந்த காப்பீட்டு தொகையும் கிடைக்கவில்லை.
கார் மோதியதில் காயமடைந்த சிறுமி தற்போது வரை கோமா நிலையிலேயே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆகவே இந்த வழக்கை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.
அந்த தீர்ப்பாயம், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தேசிய காப்பீட்டு நிறுவனம் ரூ1.15கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை சிறுமியின் வங்கி கணக்கில் செலுத்தவும், அதில் ரூ.25 லட்சத்தை அவளது மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக எடுக்கலாம் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.