இந்தியா

பயங்கரவாதத்தை ஊக்குவிக்க வேண்டாம்.. இந்தியா வந்த போலந்து துணை அதிபரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

Published On 2026-01-20 03:26 IST   |   Update On 2026-01-20 03:26:00 IST
  • காஷ்மீர் விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும் என்று போலந்து துணை பிரதமர் குறிப்பிட்டார்.
  • இந்தியா தனது தேச நலன் சார்ந்த விஷயங்களில் யாருடைய அறிவுரையையும் எதிர்பார்க்கவில்லை

போலந்து நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தார்.

அப்போது பாகிஸ்தானுடன் இணைந்து அவர் வெளியிட்ட கூட்டறிக்கையில், "காஷ்மீர் விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஜனவரி 17 முதல் 19 வரை மூன்று நாள் டெல்லி வருகை தந்தார். அவரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு கூட்டத்தின்போது பேசிய ஜெய்சங்கர், "சில நாடுகள் தங்களுக்குச் சாதகமான பிரச்சினைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பேசுவதும், காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களை விமர்சிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பயங்கரவாதம் எங்கு நடந்தாலும் அது பயங்கரவாதம்தான். உக்ரைனில் நடக்கும் போரை ஒரு கண்ணோட்டத்திலும், இந்தியாவில் நடக்கும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை மற்றொரு கண்ணோட்டத்திலும் பார்க்க முடியாது. 

இந்தியா தனது தேச நலன் சார்ந்த விஷயங்களில் யாருடைய அறிவுரையையும் எதிர்பார்க்கவில்லை. போலந்து அல்லது மற்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் நியாயமான கவலைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். போலந்து எங்கள் அண்டை நாடுகளில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

மேலும் இதன்போது ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியாவை மட்டும் அமெரிக்கா குறிவைக்கிறது என ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.   

Tags:    

Similar News