சட்டசபையில் ஆர்எஸ்எஸ் கீதத்தை பாடிய டி.கே.சிவகுமார்.. பாஜகவில் இணைகிறாரா? - பதில் இதுதான்
- ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே' பாடலை பாடினார்
- தாலுகா மற்றும் மாவட்ட மையங்களில் கள அளவில் கல்வி நிறுவனங்களை அமைப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அதன் அமைப்பை எவ்வாறு பலப்படுத்துகிறது என்பது எனக்குத் தெரியும்
நேற்று கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் அவையில் காங்கிரசை சேர்ந்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாடலை பாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
பாஜகவை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் ஆர். அசோகா, டி.கே. சிவகுமார் அவரது அரசியல் வாழ்வில் முந்தைய காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்து இயங்கியதை சுட்டிக்காட்டினார்.
உடனே இருக்கையில் இருந்து எழுந்த சிவகுமார் ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே' பாடலை பாடினார். இதனால் எதிர் இருக்கைகளில் இருந்த பாஜகவினர் தங்கள் மேசைகளை தட்டி சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் அவர் பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து இன்று ஊடகங்களிடம் பேசிய அவர், பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ் உடன் கைகோர்ப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நான் ஒரு அர்ப்பணிப்புள்ள காங்கிரஸ்காரன். என் வாழ்க்கை, என் இரத்தம் காங்கிரஸ் கட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்சியை வழிநடத்தி வரும் நான், ஒரு தூணாக நிற்பேன்.
ஆர்.எஸ்.எஸ் கீதத்தைப் பாடுவது குறித்து கேட்டபோது, "நான் ஜனதா தளம் மற்றும் பாஜகவை பற்றி படித்திருக்கிறேன். மேலும் ஆர்.எஸ்.எஸ் பற்றியும் கற்றுக்கொண்டேன்.
ஒவ்வொரு அரசியல் கட்சியைப் பற்றியும் எனக்குத் தெரியும். தாலுகா மற்றும் மாவட்ட மையங்களில் கள அளவில் கல்வி நிறுவனங்களை அமைப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அதன் அமைப்பை எவ்வாறு பலப்படுத்துகிறது என்பது எனக்குத் தெரியும்.
அரசியல் ரீதியாக நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு தலைவராக, என் எதிரிகளில் யார் நண்பர், யார் எதிரி என்பதை நான் அறியாமல் இருக்க முடியாது? அதனால்தான் நான் ஆர்எஸ்எஸ் வரலாற்றையும் படித்திருக்கிறேன்.
சில நேரங்களில் சில அமைப்புகளில் சில நல்ல குணங்கள் இருக்கும். அவற்றை நாம் கவனிக்க வேண்டும், இல்லையா? நான் அதைத்தான் செய்திருக்கிறேன்" என்று சிவகுமார் கூறினார்.