இந்தியா

இலவச மின்சாரம், பெண்களுக்கு உதவித்தொகை திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்: டி.கே. சிவக்குமார்

Published On 2023-01-20 03:11 GMT   |   Update On 2023-01-20 03:11 GMT
  • காங்கிரஸ் ஆட்சியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
  • சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் கூட்டாக மக்கள் குரல் என்ற பெயரில் பஸ் யாத்திரையை தொடங்கியுள்ளனர். அந்த யாத்திரையையொட்டி ஹாவேரியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதாவை ஆதரிக்குமாறு அக்கட்சி தலைவர்கள் கேட்கிறார்கள். நீங்கள் எதற்காக அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்?. 40 சதவீத கமிஷன் பெறுவதற்கா?, இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க பணம் வாங்குவதற்கா?. ஒவ்வொரு அரசு வேலைக்கும் லஞ்சம் இவ்வளவு என்று நிர்ணயித்து வாங்குகிறார்கள். விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிப்பதாக மத்திய அரசு கூறியது. அதன்படி விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளதா?.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்யாண-கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சமீபத்தில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். அப்படி என்றால் அவரது சொந்த மாவட்டமான ஹாவேரிக்கு எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன?.

காங்கிரஸ் ஆட்சியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. மாநிலத்தின் மின் உற்பத்தி திறனை 10 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 21 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்தினோம். நாங்கள் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காவை அமைத்தோம்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கிருஹஜோதி திட்டத்தை அமல்படுத்தி வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளோம். பெண்களுக்கு அதாவது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

பிரதமர் மோடி கர்நாடகம் வந்துள்ளார். ஒப்பந்ததாரர்கள் 40 சதவீத கமிஷன் பெறுவதாக புகார் அளித்துள்ளனர். இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும். நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

Similar News