இந்தியா

தைரியம் இருந்தால் சொத்து விவரங்களை வெளியிடுங்கள்: உத்தவ் தாக்கரேக்கு பட்னாவிஸ் சவால்

Published On 2023-06-27 03:25 GMT   |   Update On 2023-06-27 03:25 GMT
  • மோடி ஒட்டுமொத்த இந்தியாவையும் அவரது குடும்பமாக நினைக்கிறார்.
  • எனது வாழ்க்கை திறந்த புத்தகம்.

மும்பை :

வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த 23-ந் தேதி 15 கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்றவே கூட்டத்தில் கலந்து கொண்டனர் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்தார்.

இதையடுத்து உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ், சூதாட்ட தரகர் அனில் ஜெய்சிங்லானியின் மகள் அன்ஷிகா இடையேயான வாட்ஸ்அப் உரையாடல் பற்றி பேசி இருந்தார்.

இந்தநிலையில் சந்திராப்பூரில் நடந்த மோடி அரசின் 9 ஆண்டு சாதனை நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

பிரதமர் மோடியின் பணி, குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் தங்கள் வாரிசுகளை பாதுகாக்க ஒரே கூரையின் கீழ் பாட்னாவில் வரவைத்து உள்ளது.

மோடியை அகற்ற அல்ல, தங்கள் குடும்பங்களை காக்கவே அவர்கள் ஒன்று திரண்டனர். சோனியா காந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள் நாட்டை பற்றி கவலைப்படுவார்களா?, அல்லது தங்கள் பிள்ளைகள் பற்றி கவலைப்படுவார்களா?.

மோடி ஒட்டுமொத்த இந்தியாவையும் அவரது குடும்பமாக நினைக்கிறார். நான் யாருடைய வேலையிலும் தலையிடுவது இல்லை. ஆனால் நான் நுழைந்தால் பாதியில் விடமாட்டேன். பாட்னாவில் நடந்த கூட்டம் குடும்ப கட்சிகளுடையது என நான் கூறினேன். ஆனால் நீங்கள் (உத்தவ் தாக்கரே) எனது மனைவியை பற்றி பேசுகிறீர்கள்.

நான் கண்ணாடி வீட்டில் இல்லை. ஆனால் கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் மற்றவர்களின் வீடுகளின் மேல் கல்வீசக் கூடாது. எனது வாழ்க்கை திறந்த புத்தகம். உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்களின் குடும்ப சொத்துகளை பொதுவெளியில் வெளியிடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News